எழும் தமிழ் ஈழம்

Friday, August 21, 2009

எழும் தமிழ் ஈழம் என்றால் குற்றமா?


ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள் போன்ற வார்த்தைகளை கேட்கவே கசக்கிறது கலைஞருக்கு. அதனால்தான் அவ்வார்த்தைகளுக்கு மறைமுக தடை விதித்திருக்கிறது தமிழக அரசு. எழும் தமிழ் ஈழம் என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 17-ஆம நாள் இன விடுதலை அரசியல் மாநாடு நடத்தினர் விடுதலை சிறுத்தைகள். அன்னிகழ்வுக்காக அவர்கள் அமைத்திருந்த விளம்பரப் பதாகைகளில் ஈழ வரைபடம், எழும் தமிழ் ஈழம் என்கிற வாசகம், தேசியத் தலைவரின் படம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

ஆனால் விழாவன்று காலை ஈழம் என்ற வார்த்தையும் பிரபாகரன் படமும் வெள்ளைத்தாள் கொண்டு, காவல்துறையால் மறைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் விளம்பரத் தட்டிகள் கிழித்தெரியப்படிருந்தன. இதனால் ஆவேசமுற்ற திருமா எழும் தமிழ் ஈழம் என எழுதுவதால் இறையாண்மை மீறல் ஏற்பட்டுவிட்டதா? இனத்துக்காக போராடுவது இறையாண்மை மீறல் என்றால், அத்தகைய மீறலை பிறவிப் பெருங்கடனாக நினைத்து நாங்கள் மேற்கொள்ளவே செய்வோம். எழும் தமிழ் ஈழம் என நாங்கள் முழங்குவது தவறென்றால், அதற்காக எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் எங்களுக்கு கொடுங்கள். ஈழத்தில் போராடி செத்தவர்களில் நாங்களும் ஒருவராக இருந்துவிட்டு போகிறோம். தனிஈழத்தை அங்கிகரியுங்கள்.... புலிகள் அமைப்பை மக்கள் இயக்கமாக அனுமதியுங்கள்.... பிறந்த மண்ணை இழந்து தவிக்கும் என் தமிழினத்தை கைதூக்கி விடுங்கள்... அன்றைக்குத்தான் எங்கள் ஆவேசம் அடங்கும்..... எங்களின் மூர்க்கம் முடங்கும் என்று கொதித்திருக்கிறார்.

இம்மாநாடு முடிந்த அடுத்தநாள் நாளேடுகளில் ஒரு விளம்பரத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவதும், தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களின் பெயரையோ, படத்தையோ விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்பு தமிழ்நாட்டில் ஈழ அதரவு நிலை எழுச்சிபெற்ற போது, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதை தடை செய்ய கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. வழக்கறிஞர்கள் போராட்டம் தீவிரமானபோது காவல் துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதலை உண்டாக்கி போராட்டம் திசை மாற்றப்பட்டது. இப்பொழுது மீண்டும் மக்கள் எழுச்சியுற்று போராடுவார்களோ என்ற அச்சத்தால இவ்வாறு அடக்குமுறையை ஏவுகிறார்.

தேர்தலுக்குப்பின் அனைத்து தரப்பினரும் ஊமயாகிவிட்டனர். தேர்தலுக்கு முன்பு போட்டிபோட்டுக்கொண்டு தமிழினத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சிகள் இன்று வாய்திறக்க மறுக்கின்றன. அவர்கள் வியாபாரம் முடிந்துவிட்டதல்லவா? சிறுத்தைகள் ஆடுகளாகிவிட்டன என்று நையாண்டி செய்தனர் கம்யுனிஸ்ட்டுகள். இன்று சிறுத்தைகள் சீருகின்றன. ஆனால் கம்யுனிஸ்ட்டுகளை காணவில்லை. வைகோ வனவாசம் போய்விட்டார். செல்விக்கு திருமதியை எதிர்த்துப் போராடவே நேரம் போதவில்லை. ஆனால் எம்மினம் உள்ளுக்குள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அது பொங்கும்போது தமிழ்நாட்டிலும் புரட்சி வெடிக்கத்தான் போகிறது.

ஈழமும் ஊடகமும்..

Tuesday, August 18, 2009


சினேகா, பத்மா மற்றும் ஈழத் தமிழர்.....

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் பெய்துவரும் மழையால், முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நம் உறவுகள் சொல்லவொன்னா துயருக்கு ஆளாகியுள்ளனர். மழைக்கு முன்னரே ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வந்த அவர்கள் இப்போது அதுவும் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கழிப்பிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மனிதக் கழிவுகள் நீரில் மிதப்பதாகவும், சுகாதாரமற்ற நிலையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் கனமழை பெய்தால் நிலைமை ஐம்பது மடங்கு மோசமாகும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில், நம்மை தம் தாய்தமிழ் உறவுகள் என்று கூறிக்கொள்ளும் நம் சொந்தங்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும்? அதிர்ச்சியில் உறைந்து கிடப்பதை விடுத்து அவர்களுடைய மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த தமிழக, இந்திய அரசுகளை நிர்பந்திக்கவேண்டும்.

இந்நிலையில் நம்முடன் இணைந்து குரல் கொடுக்கவேண்டிய ஊடகங்களோ ஈழத் தமிழர் துயர் எதையும் வெளியிடாமல், சிங்கள நாய்களின் புளுகுகளை அரைப் பக்க அளவிற்கு வெளியிடுகின்றன. அப்படியே வெளியிட்டாலும், திரைப்படங்களின் முகப்பில் நாயகன், நாயகி பெயரையடுத்து மற்றும் பலர் என்று போடுவதைப்போல்தான் ஏனோ தானோ என்று வெளியிடுகின்றன. ஆனால் தமிழகத்தின் நெ.1.என்று தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளும் மூன்று பத்திரிக்கைகள், ராஜபக்சே நம் தேசியத் தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசியதை கட்டம்கட்டி வெளியிட்டன.

தமிழனின் வேர்வையை காசாக்கி பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்கின்றன. நம் உறவுகள் அங்கே மழையில் நனைந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தி நம் காதுகளை எட்டியபோது, சிநேகாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி வந்ததையும், நடிகை பத்மா விடுதலை ஆன செய்தியையும் தொடர்ந்து வெளியிட்டு ஊடக ......சாரம் செய்து மகிழ்ந்தன.

முன்பின் அறியாத வெளிநாட்டவர்கூட நமது சொந்தங்களுக்காக குரல்கொடுத்த வேளையில், தமிழக ஊடகங்கள் ஹர்பஜன் சிங்கும், தோனியும் ஒரு கோடி ரூபாய்க்கு கார் வாங்கிய செய்தியை முன்னிலைப்படுத்தின. தமிழக ஊடகங்கள், தமிழ் மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவை. சேவை செய்யாவிட்டாலும் துரோகமாவது செய்யாமல் இருக்கட்டும்.

நஞ்சே மிஞ்சும்....

Saturday, August 15, 2009

இயற்கைக்கும் உழவுக்கும் வந்தனை செய்வோம்.....

"தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம் 2009" நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண்மையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் இம்மசோதாவின்படி, வேளாண்மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதில் வேளாண் பட்டதாரிகளின் பெயர்களை பதிவு செய்து, அவர்கள் மட்டுமே வேளாண்மை தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். வேறு யாராவது விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்களுக்கு ரூ.5000 அபராதமும், மீண்டும் அவ்வாறு செய்தால் ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் "இயற்கை விவசாய முறை தடுக்கப்படும், மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் விவசாயிகள் மீது திணிக்கப்படும், விவசாயிகள் வேளாண்மயிலிருந்து ஒதுக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்கும்" என்றுகூறி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரங்களையும், களைக்கொல்லி போன்ற பூச்சிமருந்துகளையும் மண்ணில் கொட்டியதால் நம் தாய்மண் வளமிழந்து நஞ்சாகிப் போனதுடன், சுற்றுச்சூழலும் மாசடைந்து கிடக்கிறது. இப்போது சில காலமாக நம்மாழ்வார் போன்ற விஞ்ஞானிகளும், விகடன், தினமலர் போன்ற ஊடகங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதைத் தடை செய்யவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை தமிழக அரசின் கையில் இருக்கும்போது. இம்மசோதாவின்படி நியமிக்கப்படும் வேளாண்பட்டதாரிகள் விவசாயிகளுக்கு அதிக அளவு உரமிடவும், பூச்சிமருந்து அடிக்கவும் சிபாரிசு செய்வார்கள். அதன் மூலம் ஆதாயம்பெரும் நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவார்கள். உர இறக்குமதியிலும் லாபம் பார்க்கலாம். உரக்கலப்படம் செய்பவர்களை அனுசரித்தால் அவர்களிடம் இருந்தும் வருமானம் வரும்.அதனால்தான் இம்மசோதாவை எதிர்க்கட்சிகளும் எதிர்க்கவில்லை. நாளை ஆளும் கட்சியானால் அவர்களுக்கும் லாபம்தானே?

பூமி வெப்பமடைதலுக்கான நான்கு காரணங்களில் விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன பூச்சிகொல்லிகளும், உரமும் ஒன்றாகும். மேலும் ரசாயனங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ததால் விவசாயிகளின் நண்பன் எனப்படும் மண்புழுவைக்கூட அழித்துவிட்டு இப்போது செயற்கையாக உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். இனி விவசாயிகளின் பெரிய சொத்தான விதைமுதலையும் இழந்துவிட்டு10கிராம் 500, 1000 என்று கொடுத்து வாங்கும் நிலை வரப்போகிறது.

ரசாயனங்களைக் கொட்டி மண்ணைக்கொன்றபின் விவசாயமே செய்யமுடியாது. உணவுப்பொருட்களும் உற்பத்தியாகாது. ஆனால் அதிலும் அரசியல் வா(வியா)திகளுக்கு லாபம்தான். உணவு தானியங்களை இறக்குமதி செய்து அதிலும் கொள்ளை அடிக்கலாமே...... ஆனால் இத்தனை வழிகளில் சொத்து சேர்த்தாலும் இவர்கள் தலைமுறையினர் உண்ன உணவு இருக்கப்போவதில்லை. நஞ்சே மிஞ்சும்.


தே.பா.சட்டம்...

Friday, August 14, 2009

தே.பா.சட்டம் = தேவையில்லாமல் பாயும் சட்டம்...

கோவையில் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த குட்டி மணி இன்று மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்கு முன்பும் வைகோ, சீமான், கொளத்தூர் மணி போன்றோர் தமிழக அரசால் தே.பா. சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை "தே.பா.சட்டத்தில் கைது செய்தது செல்லாது" எனக்கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக அவர்கள் மீது தே.பா.சட்டம் பாய்ந்தது. "தடை செய்யப்பட இயக்கங்களை ஆதரித்து பேசுவது குற்றமல்ல" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தினமும் செய்தித்தாள் படிக்கும் என் போன்ற சாமான்யர்களுக்கே தெரிந்திருக்கும்போது மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக செயல்படக் காரணம் என்ன? இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான கைது நடவடிக்கைகளால் எவ்வளவு அரசுப்பணம், காவல்துறையினரின் பணிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன? கைது செய்யப்படுபவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகிறார்கள்? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? கண்டிப்பாக மாநில அரசுதான் பொறுபேற்க வேண்டும். இனிமேலாவது இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பொய்களின் நாடு

Tuesday, August 11, 2009

மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கே....

விடுதலைப் புலிகளை முற்றிலும் அளித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிக்கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு பேடியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இப்பொழுது, அறவழியில் போராட முன்வந்திருக்கும் விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும் கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ முயற்சிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டார். மீதமுள்ள சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் மற்றும் இளையதம்பி ஆகியோரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் புலிகள் இயக்கத்தை சேர்ந்த மிச்சங்கள் எங்கிருந்தாலும், அவர்களையும் பிடித்து அழிப்போம் என்கிறது இலங்கை அரசு.

ஏற்கனவே நீண்டகாலம் அறவழியில் போராடி, இலங்கை அரசின் தொடர் அடக்குமுறைகளுக்கும், அராஜகத்திற்கும் நிறைய உயிர்களை பலிகொடுத்த பிறகுதான், வேறு வழியின்றி தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த ஆயுதப் போராட்டமும் பன்னாட்டு உதவியோடு முறியடிக்கப்பட்டது.

இப்பொழுது புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் அறவழி அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சூழலில், இலங்கையின் இதுபோன்ற குறுக்குவழி அரசியல் அடக்குமுறைகள் தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்து அவர்களை மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கே இழுத்துச்செல்லும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தினர் மீண்டும் ஒன்று சேர்ந்து தலைதூக்கும் வாய்ப்பு அடியோடு தகர்க்கப்பட்டுவிட்டது எனவும் , அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் புலிகள் இயக்கம் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது எனவும் கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார். அது அவன் காணும் பகல் கனவு. தனி ஒரு நபரை கைது செய்வதன் மூலம் அழிந்து விடக்கூடியதா புலிகள் இயக்கம்? இலங்கையில் கடைசித் தமிழனின் உயிர் இருக்கும் வரை, இயக்கம் உயிரோடுதான் இருக்கும்.

அவனது அண்ணன் அண்டப்புளுகன் மகிந்த ராஜபக்சே "இலங்கைக்கும் அப்பாற்பட்டு தனி ஈழம் அமைக்க பிரபாகரன் கனவு கண்டார். அவரது இயக்கத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்த்தால் அவை இலங்கை ராணுவத்தை மட்டும் எதிர்த்து போரிட வாங்கப்பட்டதாக தெரியவில்லை. பெரும் போருக்காக வாங்கப்பட்டவை" என்று கூறியுள்ளான்.

அட அறிவிலியே! அவர்களிடம் அவ்வளவு ஆயுதம் இருந்திருந்தால் இப்போது நீ பேசிக்கொண்டிருக்க முடியுமா? புலிகளின் விடுதலைப் போரை, நாடு பிடிக்கும் ஆசையால் நடந்ததாக காட்டி, தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தும் முயற்சி இது. இலங்கையின் அரசியல் பொய்களின் மீதும், அடக்குமுறைகளின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.






முதல்பாகம்

Sunday, August 9, 2009

திருவள்ளுவர் சிலை - பண்டமாற்று
ஒரு வழியாக பண்டமாற்று வியாபாரத்தின் முதல் பாகம் இனிதே நிறைவேறியிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவள்ளுவருக்கு விடிவு வந்திருக்கிறது என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சிதான். ஆனால் இது ஒரு வகையில் பண்டமாற்று வியாபாரம் என்றுதான் சொல்லவேண்டும். பெங்களூரு தமிழ் சங்கம் 18 ஆண்டுகளுக்கு முன் தெய்வப்புலவருக்கு சிலை வைத்தது. அப்போதைய பெங்களூரு தொகுதி காங்.சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ் தலைமையில் சிலை திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.

சில கன்னட அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகி சிலை வைக்க தடை பெற்றதை அடுத்து 18 ஆண்டுகள் சாக்குத் துணியால் கட்டிவைக்கப்பட்டது. இப்பொழுது அதே நீதிமன்றம், திறப்பு விழாவிற்கு தடை கேட்ட வழக்கின் மீது தீர்ப்பளிக்கும்போது "இந்த வழக்கால் இரு மாநில மக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தமிழன், கன்னடன், மலையாளி என்று நாம் வேறுபட்டுக்கொள்ளாமல் இந்தியனாக வாழவேண்டும். சிலை திறப்பு மூலம் இரு மாநிலத்திலும் சகோதரத்துவம் வளரும். இது போன்ற வழக்குகள் நீதி மன்றத்திற்கு வரக்கூடாது" என்று கூறியுள்ளது. அதே நீதிமன்றம்தான் முன்பு சிலை திறப்பதற்கு தடையும் விதித்தது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நீதிமன்றத் தீர்ப்பும் மாறும் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு, அதன் மூலம் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தவர் எடியூரப்பா. இப்பொழுது பெங்களூரு நகர் மன்றத் தேர்தலில் தனது கட்சி வெல்ல வேண்டும் என்பதற்காக அதே எடியூரப்பா சகோதரத்துவம் பேசுகிறார். தன்னுடைய 18 ஆண்டுகால சபதத்தை சகோதரர் எடியூரப்பா நிறைவேற்றிவிட்டார் என்று நமது முதல்வரும் புளகாங்கிதம் அடைகிறார். ஆனால் நாங்கள் முதலில் திருவள்ளுவருக்கு சிலை திறக்கிறோம். அதற்கு மாற்றாக நீங்கள் சர்வக்ன்ஜர் சிலையை திறக்கவேண்டும் என்ற பண்டமாற்று ஒப்பத்தந்தின் அடிப்படையில் அல்லவா திறப்பு விழா நடந்திருக்கிறது? இதில் மகிழ்வதற்கு என்ன இருக்கிறது?

"உலகில் உள்ள எல்லாம் எல்லாருக்கும் பொதுவானது" என்பதைத்தான் கன்னடக் கவிஞர் தனது நூலில் வலியுறுத்தி உள்ளாராம். ஆனால் கன்னடர்கள் ஆற்றுக்கு மூடியும், காற்றுக்கு வேலியும் போட நினைக்கிறார்கள். இனியாவது அந்தக் கவிஞரின் கூற்றை ஏற்று நடப்பார்கள் என்று நம்புவோம்.

இரட்டை வேடம்....

Saturday, August 8, 2009

கே.பி. கைது...கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

ஈழத்தில் போர் என்ற பெயரில் தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது சர்வதேச சமூகம் மெத்தனமாகவே இருந்தது. அதனால் துணிவுபெற்ற இலங்கை அரசு இனப்படுகொலையையும், மனித உரிமைமீரலையும் வெளிப்படையாகவே நிகழ்த்தியது. ஒருவழியாக போர் முடிந்தபிறகும் அங்கு மனித உரிமை மீறல்கள் குறையவில்லை.

ஆனால் இதை தட்டிக் கேட்கவேண்டிய சாவதேச சமூகமோ புணரமைப்பு, மீள்கட்டுமானம் என்ற பெயரில் இலங்கைக்கு மேலும் மேலும் நிதி உதவிகளை வாரிவழங்கி வருகின்றன.

இந்தியா சுமார் அய்யாயிரம் கோடிவரை வழங்கியது. போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டிற்கு உள்ளான இலங்கைக்கு நிதிஉதவி அளிக்கக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்த்த போதும், சர்வதேச நாணய நிதியம் 2.5 டாலர் கடன் வழங்கியுள்ளது. சமீபத்தில் சிறிலங்காவின் மிதிவெடி அகற்றும் பணிகளுக்கு பிரிட்டன் அரசும் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பகுதி சிறிலங்காவின் ராணுவ வளர்ச்சிக்குத்தான் செலவிடப்படும் என்பது நமக்குத் தெரியாததல்ல.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல நாடுகள் பேசி வந்தாலும் அவற்றின் செயல்களில் நேர்மையில்லை. ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், சர்வதேச மனித உரிமை ஆணையத்திலும், பண்ணாட்டு நாணய நிதியத்திலும் இலங்கை இனவெறி அரசுக்கு எதிரான தீர்மானங்கள் அனைத்தும் தோற்கடிக்கப் பட்டதிலிருந்தே இந்த உண்மையை உணர்ந்துகொள்ளலாம்.

இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்ட விதமும் அதை உறுதி செய்கிறது. செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா அரசு வட்டாரங்கள் நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன. இதேவேளை பத்மநாதன் சிங்கப்பூரில் வைத்தே கைது செய்யப்பட்டதாகவும் தாய்லாந்தில் அல்ல என்றும் தாய்லாந்தின் சிறப்பு போலீஸ் பிரிவின் தலைவர் தீரா தேஜ் ரொட்போங் கூறியுள்ளார். ஆனால் சர்வதேச விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் விரோதமாக மலேசியாவில் செல்வராசா பத்மநாதனை இலங்கை அரசு கைது செய்து இலங்கைக்குத் தனி விமானத்தில் கடத்திப் போய் அவரைச் சித்திரவதை, கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

கே.பி எங்கு கைது செய்யப்பட்டார் என்பதில் இத்தனை முரண்பாடான தகவல் வெளியாக காரணம் என்ன? இலங்கையின் ஆளுமை சர்வதேச அளவில் நீள்கிறதா? அல்லது அதன் அண்டை நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, ஈழத் தமிழருக்கு எதிராக தீவிரமாக செயல்படுகின்றனவா? தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போரைக் கைவிட்டு, ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்தவர் கே.பி. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கவும், அவர்களை மீள் குடியேற்றம் செய்யவும் உதவுமாறு தொடர்ந்து சர்வதேச சமூகத்தை வற்புறுத்தி வந்தார். இத்தகைய ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் கே.பி யை இத்தனை மர்மமான முறையில் கடத்தி அடைத்து வைத்துள்ள நிலையில் எந்த நாடாவது, அல்லது அமைப்பாவது இதுவரை அதற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?


இலங்கைக்கு போரின் போதும், போருக்கு பின்னரும் பல நாடுகளும் உதவி வந்துள்ளன.. ஆனால் அவையே ஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல் பற்றியும், அவர்களின் பாதுகாப்பு, மீள் குடியேற்றம் பற்றியும் பேசி, இரட்டை வேடம் போடுகின்றன.

தமிழன் இந்தியனா?

Tuesday, August 4, 2009

"தமிழக" மீனவர்களும், "இந்திய" மாணவர்களும்.....



தமிழக மீனவர்கள் மீது ஆக.2-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி படகுகள்,வலைகள் என 36லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளது. இந்தப்பிரச்சனையை பிரதமர் மன்மோகன்சிங் கவனத்திற்கு தமிழக முதல்வர் கொண்டு சென்றார். இந்த விஷயத்தில் வெளியுறவு அமைச்சர் தலையிட்டு தீர்வு காண்பார் என்று கருணாநிதியிடம் பிரதமர் உறுதியளித்தார். இப்படி பலமுறை உறுதியளித்தும் இதுவரை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று இலங்கை கடற்படையை எச்சரிக்கவில்லை.

மேல இருக்கிறது எல்லாம் நான் சொன்னது இல்லிங்க... திருச்சி எம்.பி. சிவா மாநிலங்களவையில் பேசினது. மீனவர்கள் அதிகமா இருக்கிற கன்னியாகுமரி, தூத்துக்குடி எம்.பிக்கள் வாயே திறக்கலிங்க. சரி, அது போகட்டும் விடுங்க.

இதற்கு நிர்வாகத் துறை அமைச்சர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "இந்தப் பிரச்சனையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பேன்". (இந்த வரியை கலைஞரின் குரலில் படிக்கவும்) இந்த இடத்துல நம்ம தங்கபாலு 05-04-2009 அன்று தனது தேர்தல் அறிக்கையில சொன்னது தானா நினைவுக்கு வந்து தொலைக்குது.

"இந்தியக் கடல் எல்லைப்பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகிற கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு சமவாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நான் 2008 செப்டம்பர் 13ந் தேதி புதுடெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று வலியுறுத்தினேன்


நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களோடு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நானும், பிரதமர் டாக்டர்மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.இது குறித்து சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகிய தலைவர் களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் அப்படின்னு சொல்லியிருக்காரு.

ஏனுங்க, தங்கபாலு நேர்ல பிரதமர்கிட்ட பேசியிருக்காரு. நம்ம முதல்வர் மாசத்துல நாலு கடுதாசி எழுதுறாரு. மீனவர்கள் அப்பப்ப வேலை நிறுத்தம், போராட்டம் எல்லாம் நடத்துறாங்க. இதெல்லாம் பிரதமர் கவனத்துல ஏறவே இல்லையா? இல்ல, கஜினி பட நாயகன் மாதிரி 15 நிமிடத்திற்கு ஒரு தடவை பழச எல்லாம் மறந்துருவாரா? என்ன கொடும சார் இது?

ஆஸ்திரேலியா-வில பத்து, பதினஞ்சு மாணவர்கள் அடிபட்டவுடனே மத்திய அரசுல இருந்து விளக்கம் கேட்டு கடுதாசி அனுப்புனாங்க. இப்ப வெளியுறவுத் துறை அமைச்சர் அங்க போய் அஞ்சு நாள் தங்கியிருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பா பேசப்போறாரு. ஏன்னா, அவங்க "இந்திய மாணவர்கள்". நம்ம மீனவர்கள் "தமிழக மீனவர்கள்"தானே. வடநாட்டான் என்னிக்காச்சும் நம்மள இந்தியனா நினச்சு இருக்கானா?

அவன விடுங்க ... நம்ம சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வீட்டு மனை வேணும்னு 30 நிமிடத்துல 130 பேர் கைநாட்டுப் போட்டு சாதனை பண்ணுனாங்க. என்னிக்காச்சும் ஒரு 10 பேர் மீனவர்களுக்காக ஒண்ணா குரல் கொடுத்திருப்பாங்களா? ரெண்டு பணக்கார அண்ணன் தம்பிங்களுக்குள்ள பிரச்சனை வந்தவுடனே, ஒரு பணக்காரனுக்கு ஆதரவா சமாஜ்வாடி கட்சி எம்.பி-க்கள் மாநிலங்களவையை ஒரு நாள் முழுக்க முடக்கி வச்சாங்க. நம்ம எம். பி-க்கள் என்னிக்காச்சும் மக்களவையிலோ, மாநிலங்களவயிலோ உரக்க குரல் கொடுத்திருப்பாங்களா? இப்படி இருந்தா, "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்" னு அடிக்கத்தாங்க செய்வான்.

இலங்கையில ஈழத் தமிழர்கள அடிச்சப்ப அவனைத்தானே அடிக்கறான், நமக்கென்னன்னு நம்ம பொழப்ப பாத்துகிட்டு இருந்தோம். இப்ப தமிழக மீனவர்கள அடிக்கும்போதும் அவங்களைத்தானே அடிக்கறான், நமக்கென்னன்னு இருப்போம். ஒரு நாள் நம்மளையும் வீடு புகுந்து அடிப்பான்.வாழ்க ஒருமைப்பாடு! வாழ்க இறையாண்மை! வாழ்க இந்திய தேசியம்!



தமிழீழ தாயகம்

Saturday, August 1, 2009


வந்தாரை வாழ வைத்தோம் , தமிழ் சொந்தங்களை வீழ வைத்தோம்

"நாங்கள் தனி நாடு கேட்கவில்லை. சிங்களரோடு சமமாகவே வாழ விரும்புகிறோம். இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும், ஈழத் தமிழ் நிலத்துக்கு தரப்படவேண்டும்" என ஈழத் தமிழர்கள் இறங்கிப்போகவேண்டும் என்கிறார் தமிழருவி மணியன்.

"சிங்களர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தமிழர்கள் அதிகாரப் பகிர்வு பெறவேண்டும்" என்கிறார் கருணாநிதி. "தமிழ் மக்கள் அமைதியாக வாழும் வகையில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்துகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா.

"தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தான் அழுத்தம் கொடுத்து வருவதாக" கூறுகிறார் பாண் கீ மூன்.

"தமிழர்கள் இனி தாயக விடுதலையைக் கைவிட்டு, இலங்கை அரசுக்கு கட்டுப்பட்ட ஒரு மாநிலத்தில் வாழவேண்டும்" என்று உலக அளவில் தமிழர்களுக்கு எதிராக ஒரு பரப்புரை நிகழத் தொடங்கி இருப்பதையே இவர்களின் கூற்றுகள் தெளிவாக்குகின்றன.

அவர்கள் அறிவுரையை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன நடக்கும்? தமிழர்களுக்கென ஒரு சிறு பகுதியை ஒதுக்கி மாநிலம் என்பார்கள். கைக்கூலி கருனாவைப்போல் ஒரு பொம்மையை முதலமைச்சர் என்பார்கள். அந்த சிறு பகுதியிலும் சிங்களவன் குடியேற்றம் நடக்கும். பள்ளிகளில் சிங்கள ஆசிரியனை நியமித்து தமிழ் மொழியை அழிப்பார்கள். காவல்துறையும் அவர்கள் வசமே இருக்கும். மக்கள் இப்போது முகாம்களில் உள்ள நிலைக்கும் அப்போதைய நிலைக்கும் எந்த வேறுபாடும் இருக்கப்போவதில்லை.

ஆனால் அதையும்கூட இப்போது தரத் தயாரில்லை சிங்களன். சமீபத்தில் ஒரு இணைய தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளான் ராஜபக்சே. நாடாளுமன்றத்தில் தனக்கு சிறிய பெரும்பான்மையே உள்ளதாகவும், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியிருப்பதால், அதிகாரப் பகிர்வு தற்போது சாத்தியமல்ல எனவும் தெரிவித்துள்ளான். இதிலிருந்தே சிங்களன் எப்போதும் தனக்கு சமமாகத் தமிழனை நடத்த முன்வரமாட்டன் என்பதை புரிந்துகொள்ளலாம்.

உலகின் அங்கீகாரம் கிடைக்கப் பெறாமலே, ஒரு அரசை நிறுவி, இராணுவம், நிதி, நீதி, மருத்துவம், காவல்துறை, வங்கித்துறை, கல்வித்துறை, முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம் என ஒரு அரசுக்கு இருக்கவேண்டிய துறைகள் அனைத்தையும் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வரலாறு படைத்துவிட்டோம். நாம் படைத்த இந்த வரலாற்றை சிதைத்து, நம்மை பண்டைய அடிமை நிலைக்கு எடுத்துசெல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தவரையும் வெற்றி பெறும்வரை தீவிரவாதி என்றுதான் உலகம் சொல்லும். ஆனால் விடுதலையை வென்றெடுத்துவிட்டால் அவர்களை புரட்சியாளர்கள் என்பார்கள். நாம் தமிழீழத்தை வென்றெடுப்பதன் மூலமே தாயக விடுதலைக்கு உயிர் தியாகம் செய்த நம் சொந்தக்களுக்கு புரட்சியாளர்கள் என்கிற கவுரவத்தை பெற்றுத் தரமுடியும்.

'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் நமது போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டு அறவழியில் போராடுவோம். தமிழீழம் பெறுவது தமிழர்களின் உரிமை. அதற்காக போராடுவது ஒவ்வொரு தமிழனின் கடமை. "வந்தாரை வாழ வைத்தோம் , தமிழ் சொந்தங்களை வீழ வைத்தோம்" என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டோம். இனியாவது சாதி, மதம், அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒற்றுமையுடன் போராடுவோம். "புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்" என்று போராடியபோது புலிகளைக் காரணம்காட்டி சிலர் நமக்கு ஆதரவு தரமறுத்தனர். இப்போது "தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்" என்கிறோம். தாய்த் தமிழ் உறவுகளே, இப்போதாவது ஒன்றுபட்டு நம் இன விடுதலைக்கு குரல் கொடுங்கள்..


தமிழன்

Tuesday, July 28, 2009

தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.

திருப்பூரில் உள்ளது நியூ மெரிடியன் அப்பரெல்ஸ் லிமிட்டெட் என்கிற உள்ளாடை தயாரிக்கும் தொழிற்சாலை. அங்கு சுமார் 1000 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சமிந்த பண்டார நாயகே என்ற சிங்களன் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அன்று முதல் படிப்படியாக தமிழர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு ஒரிசாவிலிருந்து ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளான். மேலும் பதினைந்து சிங்களர்களை மேற்பார்வயாளர்களாகவும் நியமித்துள்ளான். அந்த சிங்களர்கள் அங்குள்ள பென்தொளிலாளர்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர். மேலும் மற்ற தொழிலாளர்களிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளனர். இதை தட்ட்டிகேட்ட ரவி, செல்லபாண்டியன் ஆகிய தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைக் கண்டித்து ஐ.என்.டி.யு.சி சங்கத் தோழர்கள் உண்ணவிரதப் போராட்டம் இருக்க, ஆலை நிர்வாகமோ ஆலையை மூடிவிட்டது. தமிழன் ஈழத்தில் அடிவாங்கியபோது கொதித்தெழாத தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள். தமிழன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிங்களனையும், வடனாட்டுக்காரனையும் இங்கிருந்து விரட்டவாவது குரல்கொடுங்கள் என்று முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேலான பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளியாகி உள்ளது.

சிங்களவன் ஈழத்தமிழர்களைத்தானே அடிக்கிறான் என்று நாம் உணர்ச்சியற்று இருந்தோம். இப்போது தமிழ் நாட்டின் மத்திய மாவட்டமான திருப்பூருக்கே வந்து அடிக்கிறான். 1000 தமிழ் தொழிலாளர்கள் உள்ள இடத்தில் 15 சிங்களன் காலித்தனம் செய்கிறான் என்றால், தமிழன் என்றும் ஒன்றுபட்டு போராடமாட்டான் என்கிற துணிச்சல்தானே.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க , காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், அண்ணன் சீமான், அய்யா பழ.நெடுமாறன் போன்ற தமிழ் உணர்வாளர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுமாறும், தமிழின துரோகிகளுக்கு எதிராக வாகளிக்குமாரும் கேட்டனர். ஆனால் நாம் 200-க்கும், 300-க்கும் நமது இனுஉணர்வை விற்றோம். அதற்கான பலனை மூன்றாம் நாளே அறுவடை செய்தோம். 200 ரூபாய்க்கு இனுஉணர்வை அடமானம் வைத்த மூன்றாம் நாளே 20,000 தமிழ் உறவுகளை சிங்கள காடயனுக்கு காவுகொடுத்தோம். காலம் கடந்தாவது விழித்துக் கொள்வோம் தோழர்களே. இனியாவது நம் இனம்காக்க, இனமானம் காக்க ஒன்றுபட்டு போராடுவோம்.

பிரபாகரன்

Saturday, July 25, 2009

பிரபாகரன் மரணம் உண்மையா? நன்மையா? தீமையா?

காந்தியடிகள் இறந்தபோது உலகமே கண்ணீர் விட்டது. இப்போது பிரபாகரன் மரணமும் உலகின் கவனத்தை ஒருங்கே பெற்றிருக்கிறது. ஆனால் காந்தியடிகள் இறந்தபோது கண்ணீர் விட்ட உலகம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது நிம்மதி அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

விடுதலைப்புலிகள் எப்படி உருவானார்கள்?



இலங்கையில் முக்கிய வருமானம் தேயிலைத் தோட்டம்தான். தேயிலையின் தேவை அதிகரித்ததும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் நிறைய தேவைப்பட்டார்கள். பல இடங்களிலிருந்தும் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் என்றாலும் தமிழகம் பக்கத்து மாநிலமாக இருந்ததாலும், ஏற்கனவே தமிழர்கள் அங்கே வசித்து வந்ததாலும் கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அங்கே குடியேறத் தொடங்கினார்கள்.


தேயிலைத்தொட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் மெல்ல மெல்ல பிறதுறைகளிலும் புகுந்து விட்டார்கள். பிழைக்க வந்த தமிழர்கள் தங்களையும் மிஞ்சி விடும் நிலையைக்கண்டு சிங்களத் தலைவர்கள் சிலர் இவர்களின் முனனேற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். அதன்படி தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பகைமையை வளர்த்து விட்டார்கள். தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் அவர்களின் கல்விமுன்னேற்றத்தை தடை செய்யவேண்டும் என்று எண்ணி திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இலங்கை அரசு இறங்கியது. இதைத் தெரிந்துகொண்ட தமிழர்கள் மத்தியில் ஒரு மாணவர் பேரவை உருவானது. இந்த மாணவர் பேரவையில் பிரபாகரனும் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்.


சிங்கள ராணுவத்தினர் மாணவர் பேரவையில் இருப்பவர்களை எல்லாம் கைது செய்து சித்திரவதை செய்தனர்.இந்த நிலையில்தான் புதிய தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.


இவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆதரவு மாநாடு ஒன்றை நடத்தினார்கள். இம்மாநாட்டில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் ஒன்பது பேர் பலியானார்கள். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த மேயர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் பிரபாகரன்.


பிரபாகரன் துவக்கத்திலேயே கொலை வெறி மிக்கவன் என்பதை இந்த முதல் சம்பவமே நிருபித்துவிட்டது. இவர் என்ன செய்திருக்கவேண்டும்? பாராளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்ப முயற்சிசெய்திருக்கலாம். அல்லது இலங்கை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குகூட பதிவு செய்திருக்கலாம். ஆனால் பழிக்குப்பழி என்ற நோக்கத்தில் கேவலமாக திட்டமிட்டு மேயரை சுட்டுக் கொன்றதை எப்படி நியாயப்படுத்தமுடியும்?



விடுதலைப்புலிகள் அமைப்பின் நோக்கம் என்ன?


இவர்களது நோக்கம்தான் என்ன? இலங்கையில் தங்களுக்கென்று - தமிழர்கென்று தனிநாடு அமைக்கவேண்டும் என்பதா? அல்ல. இலங்கையையே தங்கள் வசம் ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் ரகசிய திட்டமாக இருந்தது. இலங்கையில் தமிழர்க்காக தனிநாடு அமைக்க வேண்டும் என கருதியதே சரியல்ல. ஏனெனில் சட்ட ரீதியாக தமிழர்களுக்கான உரிமையை மீட்டெடுக்க இயலும்.


இலங்கை ஒரு சுதந்திர நாடுதானே? பிரபாகரன் மக்களின் ஆதரவைத் திரட்டி தேர்தலில் வெற்றி பெற்று , இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை இயற்றினால் சிங்களவர்கள் எதிர்க்கவா போகிறார்கள்?


பிரபாகரனுக்கு போட்டியா?


உமாமகேஸ்வரன் அமைத்த தமிழ் ஈழ விடுதலை அமைப்பு, சபாரத்தினம் அமைத்த டெலோ அமைப்பு, பத்மநாபாவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஈ.பி.ஆர.எழ.எப். இவை அனைத்துமே தமிழர்களின் நலனுக்காக பாடுபடத்தான் தோன்றின. ஆனால் பிரபாகரன் இவர்களை எல்லாம் எதிரியாக நினைத்து கொன்றழிளித்துவிட்டார். இது என்ன நியாயம்? உண்மையில் தன்னைத் தவிர தனக்குப் போட்டியாக யாருமே வரக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்ட பிரபாகரனை ஒரு சய்கோ அரக்கன் என்றுதான் வர்ணிக்க வேண்டுமே தவிர இது எப்படி வீரமாகும்?


பிரபாகரன் பெரிய வீரனா?


பிரபாகரன் பெரிய வீரன் என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பிரபாகரன் பெரியபயந்தான்கொல்லி என்பதே உண்மை. பிரபாகரன் மாணவராக இருந்தபோதே தமிழ் ஆதரவாளர் குழுவில் இருந்தார் என்றும், போலீசார் இவரைத் தேடிவந்தபோது தப்பிவிட்டார் எனவும், இவரது தந்தை நிலமயைசொன்னபோது, என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள் என்று வீட்டை விட்டு வெளிஏறியதாகத்தான் நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது உண்மை அல்ல. பெற்றோர் இனி வீட்டில் நுழையாதே என்று துரத்திவிட்டார்கள் என்பதே உண்மை.


பிரபாகரன் வீரனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இவர் தலைமைதாங்கி விடுதலைப்புலிகளுடன் இலங்கைக்குள் சென்று ராணுவத்துடன் மோதிஇருந்தால் அல்லவா வீரன் என்று சொல்ல இயலும்? ஆனால் அப்பாவித்தமிழர்களை பகடைகாயாக்கி ராணுவத்தை எதிர்த்தாரே தவிர இவரிடம் வீரம் என்பது மருந்துக்குக்கூட இல்லை என்பதே உண்மை.


பிரபாகரன் திருமணம் முடித்துக்கொண்டது ஏன்?


இந்தியாவில் குடும்ப அரசியல் இருப்பதைப்போலவே பிரபாகரன் இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு அமைத்து அதில் தன் வாரிசுகளை ஆட்சியில் அமர்த்தி தான் மட்டுமே அரசனாக இருக்கவேண்டும் என்று முதலிலேயே திட்டமிட்டுவிட்டதால்தான் இவர் புங்குடு தீவை சேர்ந்த மதிவதைநியைத் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டது 1984. அப்போது விடுதலைப்புலிகளின் போர் மிகத் தீவிரமாக இருந்தது. தமிழர்களின் நலனுக்காக தம் வாழ்வை அர்ப்பணிக்கும் தியாகிக்கு திருமணம் எதற்கு? உடல் நோவேடுத்தால் விடுதலைப்புலிகளின் பல பெண் புலிகள் இருந்தார்களே, அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் யார் என்ன சொல்லப்போகிறார்கள்?


இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் தங்கள் சொத்து சுகத்தையெல்லாம் இழந்தார்கள். பிரபாகரன் தமிழர்களின் நலத்திற்காக எதை இழந்தார் ?


பிரபாகரன் இறந்தது உண்மையா? பொய்யா?


பிரபாகரன் சாகவில்லை என்றும், அவரைப்போல் உருவம் கொண்ட ஒருவரைத்தான் இலங்கை இராணுவம் காட்டி இருக்கிறது என்றும் சிலர் நம்புகின்றனர். உண்மையில் இறந்தது பிரபாகரன்தான். உண்மையில் பிரபாகரனை இராணுவம் சுடவில்லை. பிரபாகரனின் வன்முறைத் தத்துவத்தில் நம்பிக்கை இழந்த நெருங்கிய கூட்டாளிதான் பிரபாகரனை கொன்றிருக்கிறான் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.


பிரபாகரனின் மரணம் நன்மையா? தீமையா?


பிரபாகரன் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் என்றும், இது இலங்கைத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு என்றும் இப்போதும் பலர் கருதுகின்றனர். உண்மையில் பிரபாகரன் மரணம் பல விதைகளிலும் நன்மையே அல்லாமல் எந்த விதத்திலும் இழப்பு அல்ல. ஈழத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்தி தன்னுடைய வஞ்சக போர்குணத்தை விளம்பரப்படுத்தி காட்டினார் தவிர தமிழர்களின் நலனுக்காக எந்த விதத்திலும் பாடுபடவில்லை என்பதே உண்மை. எனவே தமிழர்கள் இனி பல வகையிலும் சந்தோசப்படுவார்களே தவிர, யாரும் வருத்தப்படமாட்டார்கள்.


மேற்கண்ட கட்டுரை புதிய தீர்ப்பு மாத இதழில் வெளியானதின் சுருக்கம். தங்கள் கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்க;


வெளியீட்டாளர் முகவரி ;
புதிய தீர்ப்பு,
எண் -3-14 , கோடங்கிபட்டி ,
சின்னாம்பட்டி அஞ்சல்,
குளித்தலை வட்டம்,
கரூர் மாவட்டம்,
தமிழ்நாடு-621311.


கட்டுரையாளர் முகவரி;
செந்தமிழ்கிழார்,
எண்.5-105,
பெரியார் பாதை மேற்கு,
அருகம்பாக்கம்,

சென்னை -600 106.



மாண்புமிகு இந்தியாவின் சிறப்பு நீதிபதி என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் செந்தமிழ்கிழாருக்கு,



புதிய தீர்ப்பு மாத இதழில் வெளியான பிரபாகரன் பற்றிய தங்கள் கட்டுரையை படிக்க நேர்ந்தது. பதில் எழுதும் அளவுக்கு தகுதியில்லாத கட்டுரை எனினும் , சில உண்மைகளை தங்களுக்கு தெரிவிப்பதற்காக இதை எழுதுகிறேன்.


முதலில், இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் என்றுதான் தங்களைப்போல் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர்களில் பெரும்பான்மையானோர் அங்கிருந்த பூர்விக குடிகளே.

கலிங்க (தற்போது ஒரிசா ) மன்னன் சிங்கபாகுவின் மூத்த மகன் விஜயன். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார்கள்.விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, "உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.



அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவளைக் காண்கிறான். முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர்.குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.


மேலும் வரலாற்று ஆசிரியர் பால்.எ.பியரிஸ் என்பவர், விஜயனின் வருகைக்கு நெடுங்காலம் முன்பே சாலவத்தை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் திருக்கடேச்வரம், முன்நீச்வரம், தொண்டீஸ்வரம், திருக்கூநீச்வரம், நகுலீச்வரம் ஆகிய பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.



பண்டைய இலங்கையின் வல்லுவத்தே ஆற்றிலிருந்து தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சிங்களர்களும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களும் வசித்து வந்ததாக British colonial secretary - sir hugh cleghorn என்பவர் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதற்கு இதுபோல் எண்ணிலடங்கா ஆதாரங்கள் உள்ளன.



தங்கள் கட்டுரையில் பிரபாகரன் என்கிற உலகத் தமிழர்களால் நேசிக்கப்படுகிற ஒருவரை மட்டுமல்லாது இன விடுதலைக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள் அனைவரையும் தரக்குறைவாக விமர்சித்து உள்ளீர்கள்.



பிரபாகரன் மக்களின் ஆதரவைத்திரட்டி தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஆவதாம். பாராளுமன்றத்தில் தீர்மானம் போட்டு தமிழர் நலம் காப்பதாம். அட கூமுட்டயே! ஈழத்தந்தை செல்வா அவர்களின் தலைமையில் பலமுறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெற்றனர். அவர்களால் செய்ய முடிந்தது என்ன?


பாராளுமன்றத்தில் எதிர் கட்சியாகவும், ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்தும், அறவழியில் எவ்வளவோ போராடியும் ஒருபயனும் இல்லாமல் இறுதியில் தந்தை செல்வாவே தமிழர்களுக்கு தனிநாடுதான் தீர்வு என்கிற தீர்மானத்திற்கு வந்தார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட குட்டிமணியின் நிலைமை என்ன ஆனது? அறவழியில் 30 ஆண்டுகள் போராடி, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை பழி கொடுத்த பிறகுதான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.



பிரபாகரனின் வீரத்திற்கு நீர் சான்று கொடுக்க வேண்டியதில்லை. ஓயாத அலைகள் என்று கூகுல்-இல் தட்டச்சு செய்து தேடிப்பார். ஒரு நொடியில் ஒரு லட்சம் சான்றுகள் கிடைக்கும். வீரம் என்பது களத்தில் நின்று சமராடுவது மட்டுமல்ல. ஓயாத அலைகள் மூன்றாம் கட்டப் போரில் 14,000 ராணுவ வீரர்கள் போர்கைதிகள் ஆனபோது, அவர்களைக் கொல்லாமல் விடுவித்தாரே! அதுதான் வீரம். “புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை. (மா சே துங்)



ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையுள்ள ராணுவத்தை 15,000 புலிகள் எதிர்த்துப் போரிடும்போது நேர்மையை எதிர்பார்ப்பது தவறு. ராமன் கூட வாலியை மறைந்திருந்து தான் அம்பெய்து வீழ்த்தினார். ஆனாலும் புலிகள் நேர்மையுடன்தான் போரிட்டனர்.புலிகளுடன் போர் என்கிற பெயரில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகளை ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள்மீது வீசி படுகொலை செய்ததுதான் சிங்களனின் நேர்மையா? பாதுகாப்பு வளையம் என்றுகூறி அப்பாவித் தமிழர்களை வரவழைத்து, அங்கும் குண்டுமழை பொழிந்தானே சிங்களன். அதுதான் நேர்மையா? மருத்துவ மனைகள், பள்ளிகள் என பாகுபாடில்லாமல் அனைத்தையும் அழித்தானே, அவன் நேர்மையானவன்? ஆனால் ராணுவ நிலைகள் தவிர பொது இடங்களை, அப்பாவி மக்களை ஒரு முறை கூட தாக்கியிறாத பிரபாகரன் நேர்மையற்றவர்? அப்படித்தானே? இப்படி எழுத ஏதாவது கூலி கிடைத்ததா?



ஏற்கனவே தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. நீரும் சேர்ந்துகொள்ள வேண்டாம். தற்போது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ முடிந்தால் உதவுங்கள். இல்லையெனில் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி பிழைப்பை நடத்துங்கள். ஈழத் தமிழர்களை விட்டுவிடுங்கள்.


மேற்கண்ட என்னுடைய விளக்கத்தில் ஏதேனும் வரலாற்று தகவல்கள் விடுபட்டிருந்தால் பின்னூட்டமிடவும் .

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs