தமிழன் இந்தியனா?

Tuesday, August 4, 2009

"தமிழக" மீனவர்களும், "இந்திய" மாணவர்களும்.....



தமிழக மீனவர்கள் மீது ஆக.2-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி படகுகள்,வலைகள் என 36லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளது. இந்தப்பிரச்சனையை பிரதமர் மன்மோகன்சிங் கவனத்திற்கு தமிழக முதல்வர் கொண்டு சென்றார். இந்த விஷயத்தில் வெளியுறவு அமைச்சர் தலையிட்டு தீர்வு காண்பார் என்று கருணாநிதியிடம் பிரதமர் உறுதியளித்தார். இப்படி பலமுறை உறுதியளித்தும் இதுவரை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று இலங்கை கடற்படையை எச்சரிக்கவில்லை.

மேல இருக்கிறது எல்லாம் நான் சொன்னது இல்லிங்க... திருச்சி எம்.பி. சிவா மாநிலங்களவையில் பேசினது. மீனவர்கள் அதிகமா இருக்கிற கன்னியாகுமரி, தூத்துக்குடி எம்.பிக்கள் வாயே திறக்கலிங்க. சரி, அது போகட்டும் விடுங்க.

இதற்கு நிர்வாகத் துறை அமைச்சர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "இந்தப் பிரச்சனையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பேன்". (இந்த வரியை கலைஞரின் குரலில் படிக்கவும்) இந்த இடத்துல நம்ம தங்கபாலு 05-04-2009 அன்று தனது தேர்தல் அறிக்கையில சொன்னது தானா நினைவுக்கு வந்து தொலைக்குது.

"இந்தியக் கடல் எல்லைப்பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகிற கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு சமவாழ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நான் 2008 செப்டம்பர் 13ந் தேதி புதுடெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று வலியுறுத்தினேன்


நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களோடு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நானும், பிரதமர் டாக்டர்மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.இது குறித்து சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகிய தலைவர் களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் அப்படின்னு சொல்லியிருக்காரு.

ஏனுங்க, தங்கபாலு நேர்ல பிரதமர்கிட்ட பேசியிருக்காரு. நம்ம முதல்வர் மாசத்துல நாலு கடுதாசி எழுதுறாரு. மீனவர்கள் அப்பப்ப வேலை நிறுத்தம், போராட்டம் எல்லாம் நடத்துறாங்க. இதெல்லாம் பிரதமர் கவனத்துல ஏறவே இல்லையா? இல்ல, கஜினி பட நாயகன் மாதிரி 15 நிமிடத்திற்கு ஒரு தடவை பழச எல்லாம் மறந்துருவாரா? என்ன கொடும சார் இது?

ஆஸ்திரேலியா-வில பத்து, பதினஞ்சு மாணவர்கள் அடிபட்டவுடனே மத்திய அரசுல இருந்து விளக்கம் கேட்டு கடுதாசி அனுப்புனாங்க. இப்ப வெளியுறவுத் துறை அமைச்சர் அங்க போய் அஞ்சு நாள் தங்கியிருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பா பேசப்போறாரு. ஏன்னா, அவங்க "இந்திய மாணவர்கள்". நம்ம மீனவர்கள் "தமிழக மீனவர்கள்"தானே. வடநாட்டான் என்னிக்காச்சும் நம்மள இந்தியனா நினச்சு இருக்கானா?

அவன விடுங்க ... நம்ம சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வீட்டு மனை வேணும்னு 30 நிமிடத்துல 130 பேர் கைநாட்டுப் போட்டு சாதனை பண்ணுனாங்க. என்னிக்காச்சும் ஒரு 10 பேர் மீனவர்களுக்காக ஒண்ணா குரல் கொடுத்திருப்பாங்களா? ரெண்டு பணக்கார அண்ணன் தம்பிங்களுக்குள்ள பிரச்சனை வந்தவுடனே, ஒரு பணக்காரனுக்கு ஆதரவா சமாஜ்வாடி கட்சி எம்.பி-க்கள் மாநிலங்களவையை ஒரு நாள் முழுக்க முடக்கி வச்சாங்க. நம்ம எம். பி-க்கள் என்னிக்காச்சும் மக்களவையிலோ, மாநிலங்களவயிலோ உரக்க குரல் கொடுத்திருப்பாங்களா? இப்படி இருந்தா, "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்" னு அடிக்கத்தாங்க செய்வான்.

இலங்கையில ஈழத் தமிழர்கள அடிச்சப்ப அவனைத்தானே அடிக்கறான், நமக்கென்னன்னு நம்ம பொழப்ப பாத்துகிட்டு இருந்தோம். இப்ப தமிழக மீனவர்கள அடிக்கும்போதும் அவங்களைத்தானே அடிக்கறான், நமக்கென்னன்னு இருப்போம். ஒரு நாள் நம்மளையும் வீடு புகுந்து அடிப்பான்.வாழ்க ஒருமைப்பாடு! வாழ்க இறையாண்மை! வாழ்க இந்திய தேசியம்!



0 comments:

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs