எழும் தமிழ் ஈழம் என்றால் குற்றமா?
ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள் போன்ற வார்த்தைகளை கேட்கவே கசக்கிறது கலைஞருக்கு. அதனால்தான் அவ்வார்த்தைகளுக்கு மறைமுக தடை விதித்திருக்கிறது தமிழக அரசு. எழும் தமிழ் ஈழம் என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 17-ஆம நாள் இன விடுதலை அரசியல் மாநாடு நடத்தினர் விடுதலை சிறுத்தைகள். அன்னிகழ்வுக்காக அவர்கள் அமைத்திருந்த விளம்பரப் பதாகைகளில் ஈழ வரைபடம், எழும் தமிழ் ஈழம் என்கிற வாசகம், தேசியத் தலைவரின் படம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
ஆனால் விழாவன்று காலை ஈழம் என்ற வார்த்தையும் பிரபாகரன் படமும் வெள்ளைத்தாள் கொண்டு, காவல்துறையால் மறைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் விளம்பரத் தட்டிகள் கிழித்தெரியப்படிருந்தன. இதனால் ஆவேசமுற்ற திருமா எழும் தமிழ் ஈழம் என எழுதுவதால் இறையாண்மை மீறல் ஏற்பட்டுவிட்டதா? இனத்துக்காக போராடுவது இறையாண்மை மீறல் என்றால், அத்தகைய மீறலை பிறவிப் பெருங்கடனாக நினைத்து நாங்கள் மேற்கொள்ளவே செய்வோம். எழும் தமிழ் ஈழம் என நாங்கள் முழங்குவது தவறென்றால், அதற்காக எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் எங்களுக்கு கொடுங்கள். ஈழத்தில் போராடி செத்தவர்களில் நாங்களும் ஒருவராக இருந்துவிட்டு போகிறோம். தனிஈழத்தை அங்கிகரியுங்கள்.... புலிகள் அமைப்பை மக்கள் இயக்கமாக அனுமதியுங்கள்.... பிறந்த மண்ணை இழந்து தவிக்கும் என் தமிழினத்தை கைதூக்கி விடுங்கள்... அன்றைக்குத்தான் எங்கள் ஆவேசம் அடங்கும்..... எங்களின் மூர்க்கம் முடங்கும் என்று கொதித்திருக்கிறார்.
இம்மாநாடு முடிந்த அடுத்தநாள் நாளேடுகளில் ஒரு விளம்பரத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவதும், தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களின் பெயரையோ, படத்தையோ விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்பு தமிழ்நாட்டில் ஈழ அதரவு நிலை எழுச்சிபெற்ற போது, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதை தடை செய்ய கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. வழக்கறிஞர்கள் போராட்டம் தீவிரமானபோது காவல் துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதலை உண்டாக்கி போராட்டம் திசை மாற்றப்பட்டது. இப்பொழுது மீண்டும் மக்கள் எழுச்சியுற்று போராடுவார்களோ என்ற அச்சத்தால இவ்வாறு அடக்குமுறையை ஏவுகிறார்.
தேர்தலுக்குப்பின் அனைத்து தரப்பினரும் ஊமயாகிவிட்டனர். தேர்தலுக்கு முன்பு போட்டிபோட்டுக்கொண்டு தமிழினத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சிகள் இன்று வாய்திறக்க மறுக்கின்றன. அவர்கள் வியாபாரம் முடிந்துவிட்டதல்லவா? சிறுத்தைகள் ஆடுகளாகிவிட்டன என்று நையாண்டி செய்தனர் கம்யுனிஸ்ட்டுகள். இன்று சிறுத்தைகள் சீருகின்றன. ஆனால் கம்யுனிஸ்ட்டுகளை காணவில்லை. வைகோ வனவாசம் போய்விட்டார். செல்விக்கு திருமதியை எதிர்த்துப் போராடவே நேரம் போதவில்லை. ஆனால் எம்மினம் உள்ளுக்குள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அது பொங்கும்போது தமிழ்நாட்டிலும் புரட்சி வெடிக்கத்தான் போகிறது.